Home மாவட்டங்கள் பெங்களூர் ஆடிப்பெருக்கு நாளான இன்றுதமிழக எல்லைக்குள் நுழைந்த காவிரி நீர்

ஆடிப்பெருக்கு நாளான இன்றுதமிழக எல்லைக்குள் நுழைந்த காவிரி நீர்

பெங்களூரு / தருமபுரி: ஆக. 3-
கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு ஆடிப்பெருக்கு நாளான இன்று மாலை வந்தடையும் என தெரிகிறது. இதற்கிடையே, மேகேதாட்டு அணைதான் இறுதி தீர்வு என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற‌ அனைத்துக் கட்சி கூட்டத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, வீராஜ்பேட்டை, சோமவார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, மைசூருவில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள க‌பினி அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 23,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து தமிழகத்துக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள‌து.
இதுகுறித்து தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆடிப் பெருக்கு நாளான ஆக.3-ம் தேதி (இன்று) மதியத்துக்குப் பிறகு, தமிழக எல்லையான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து சேரக்கூடும்’’ என்றனர்.