
டெஹ்ரான்: செப். 22:
அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கினால், இதுவரை பயன்படுத்தாத புதிய ஆயுதங்கள் மற்றும் புதிய போர் உத்திகளைப் பயன்படுத்துவோம் என ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) எச்சரித்துள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ஐஆர்ஜிசி செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி அல்-அலம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“அமெரிக்காவுடனான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நீண்டகால மோதலுக்கு ஐஆர்ஜிசி தயாராக உள்ளது. அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கினால், அதற்குத் தக்க பதிலடி வழங்கப்படும்.
“இதுவரை பயன்படுத்தப்படாத, ரகசியமாக வைத்திருக்கும் புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துவோம். மேலும், அமெரிக்காவுடனான எந்தவொரு புதிய மோதலும் முந்தைய மோதலைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதில் புதிய போர் உத்திகள் இடம்பெறும். எங்களின் இந்தப் போர்த் திறன்கள் உலகையே ஆச்சரியப்படுத்தக்கூடும்.
“இந்தப் போரில் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் தோல்வி வரலாற்றுச் சிறப்புமிக்கதும் அவமானகரமானதுமாகும். ஆனால், அந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ளும் தைரியம் அமெரிக்காவுக்கு இல்லை.
“அமெரிக்காவுக்கும் எங்கள் அமைப்புக்கும் இடையே அதிகாரபூர்வமான அல்லது அதிகாரபூர்வமற்ற உறவுகள் எதுவும் இல்லை. அந்த நாட்டுடனான ராஜதந்திரத் தொடர்புகள் ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகார வரம்புக்குள் வருகின்றன. அதேநேரத்தில், ஐஆர்ஜிசி ராணுவம் தயார் நிலையில் இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.













