
நியூயார்க்: செப். 22:
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று ஸ்லோவாக்கியா ஆதரவு தெரிவித்துள்ளது. 81-வது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் உயர்நிலை அமர்வுக்கு இடையே நடைபெற்ற முதல் “வைஷெக்ராட் குழு–இந்தியா” (V4+India) அமைச்சரவை நிலைச் சந்திப்பின்போது இந்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
ஸ்லோவாக்கிய வெளியுறவு அமைச்சர் ஜுராஜ் பிளானர் கூறுகையில், “உலக தெற்கின் முக்கிய நாடாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் வல்லரசாகவும் உள்ள இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்பதில் V4 நாடுகள் அனைத்தும் ஒருமித்த கருத்தில் உள்ளன” என்றார்.
வைஷெக்ராட் குழுவில் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, செக்கியா ஆகிய நான்கு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தச் சந்திப்பை “புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு” என்று குறிப்பிட்டார். அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள், பாதுகாப்பு, தொழில்நுட்பம், விண்வெளி, இணைப்பு, கலாசாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா–V4 நாடுகள் இடையே வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் ஆண்டுக் கூட்டத்தையும், ஆண்டுதோறும் வர்த்தக மாநாட்டையும் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மீண்டும் வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. விண்வெளி, இணைப்பு, கலாசார உறவுகள், மாணவர் பரிமாற்றம் உள்ளிட்ட மக்களிடையேயான தொடர்புகளும் விவாதிக்கப்பட்டன.
பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நிரந்தர உறுப்பினர்களும், 2 ஆண்டுக் காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களும் உள்ளனர். 2028–29 காலத்துக்கான நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் பிரசாரத்தை ஜெய்சங்கர் ஜூலையில் தொடங்கினார். சந்திப்பில் போலந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, ஹங்கேரி துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அனிதா ஓர்பான், ஸ்லோவாக்கிய வெளியுறவு அமைச்சர் ஜுராஜ் பிளானர், செக்கியா வெளியுறவு அமைச்சர் பெட்ர் மாசின்கா ஆகியோர் பங்கேற்றனர். செப். 26-ம் தேதி பொதுச் சபையின் பொது விவாதத்தில் ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார்.













