
பெங்களூர், செப். 22-
கே. அழகேசன் எழுதிய ‘கியூபிக்கிள் டு கார்னர் ஆபீஸ் – மை எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் பிராக்டீசஸ்’ (Cubicle to Corner Office-My Experience and Practices) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா பெங்களூரு கம்மனஹள்ளியில் உள்ள நந்தனா பேலஸில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குனரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். விழாவில் ஐ.டி.ஐ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எஸ். கோபு, சுங்க மற்றும் கலால்துறை முன்னாள் கூடுதல் தலைமை இயக்குனர் ஜி. மணிவாசகம் (ஐ.ஆர்.எஸ்), கொச்சின் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவர் காசி விஸ்வநாதன் (ஐ.ஆர்.எஸ்.எம்.இ), லிவியா பாலிமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பி.வி. ரமணன், என்.எஸ்.ஐ.சி அண்ட் என்.வி.சி.எஃப்.எல் நிறுவனங்களின் முன்னாள் தலைவர் பி. உதயகுமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர். மேலும், ஐ.டி.ஐ நிறுவனத்தின் முன்னாள் பொறுப்புத் தலைவர் டி. வெங்கடேஸ்வரலு, தயாரிப்புப் பிரிவு இயக்குனர் அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா மற்றும் பி.எஸ்.என்.எல் முன்னாள் முதன்மைப் பொதுமேலாளர் டி.எம். எழில் புத்தி அண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். ஐ.டி.ஐ நிறுவனத்தின் முன்னாள் மண்டல இயக்குனர் எம். அருண் குமார் தொடக்க உரையற்றி, தலைமை விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இறைவணக்கம் மற்றும் குத்துவிளக்கேற்றலுடன் விழா தொடங்கியது. நூலாசிரியர் கே. அழகேசன் அனைவரையும் வரவேற்று, தனது புத்தகத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தலைமை விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர்கள் இணைந்து புத்தகத்தை வெளியிட்டனர்.தொடர்ந்து, செல்வி ஜெகநாதன், ஞானி வி. ராய், டி. கிருஷ்ணதாஸ் ராய் மற்றும் எஸ். சண்முகப்ரியா ஆகியோர் புத்தகத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கௌரவ விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக, பெங்களூரு தமிழ் மன்றத்தின் தலைவர் டாக்டர் ஆர். பாஸ்கரன் நன்றியுரை ஆற்றினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு உபசரிக்கப்பட்டது.













