
புதுடெல்லி: செப்.22-
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முன்பே, 1980-ஆம் ஆண்டு தனது பெயரை முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாகக் கூறி, வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறிய மாஜிஸ்திரேட் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து விகாஸ் திரிபாதி சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு, சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை ரத்து செய்தார். மேலும், வழக்கை மீண்டும் புதிதாக விசாரிப்பதற்காக அதே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் புதிய விசாரணையை செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். சோனியா காந்தி 1983-ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு முன்பாகவே 1980-ஆம் ஆண்டு அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக விகாஸ் திரிபாதி தனது வழக்கில் புகார் தெரிவித்திருந்தார்.













