Home மாவட்டங்கள் சென்னை ரூ.46 கோடி செக் மோசடி முயற்சி: ராதா புகார்

ரூ.46 கோடி செக் மோசடி முயற்சி: ராதா புகார்

சென்னை: செப். 22:
ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மூலம் மோசடி செய்ய முயன்றதாக, தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மீது நடிகை ராதா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அம்பிகா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
1980-களில் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருந்த அம்பிகாவும் ராதாவும் கேரளத்தைச் சேர்ந்த சகோதரிகள். இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர்.
போரூர் ஆற்காடு சாலையில் தனக்குச் சொந்தமான ஆர்.ஆர். கார்டன் பகுதியில் ராதா வணிகம் செய்து வருகிறார். இதற்கு முன்பு அந்த இடம் ‘ஏஆர்எஸ் கார்டன் ஸ்டூடியோ’ என அழைக்கப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, குடும்ப ஏற்பாட்டின்படி அந்தச் சொத்து தனக்கு வழங்கப்பட்டதாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சொத்துகள் பிரிக்கப்பட்டதாகவும் ராதா புகாரில் தெரிவித்துள்ளார்.
தொழில் காரணமாக பல மாநிலங்களுக்கு செல்வதால், சென்னைக்கு வரும்போது வளசரவாக்கம் ஏ.ஆர். தெருவில் உள்ள தனது வீட்டில் தங்குவதாகவும், அந்த வீட்டின் தரைத் தளத்தில் ஒரு பகுதியை அக்கா என்ற முறையில் அம்பிகா பயன்படுத்த அனுமதித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தொழில் தொடர்பான அவசரச் செலவுகள், ஊழியர்களின் சம்பளம், மின்கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்துவதற்காக, தொகை நிரப்பப்படாத நிலையில் கையெழுத்திட்ட 5 அல்லது 6 காசோலைகளை அறையில் வைத்திருப்பது வழக்கம் என்றும் ராதா தெரிவித்துள்ளார். அவற்றில் 5 காசோலைகள் திருடப்பட்டு, கடந்த 17-ம் தேதி அம்பிகா பெயரில் ரூ.46 கோடி பெற முயற்சி நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தனக்கும் அம்பிகாவுக்கும் பணப் பரிமாற்றம் ஏதுமில்லாத நிலையில், தனது வங்கிக் கணக்கிலிருந்து அம்பிகாவின் கணக்குக்கு பணம் மாற்றப்பட உள்ளதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்ததாக ராதா கூறியுள்ளார். வங்கியைத் தொடர்புகொண்டு, காசோலைக்கு பணம் வழங்க வேண்டாம் எனத் தெரிவித்ததாகவும், அம்பிகாவும் தனது தம்பி மல்லிகார்ஜுன குஞ்சன் நாயரும் சேர்ந்து மோசடி செய்ய முயன்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.