
யாதகிரி, ஆக. 5: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சைதாப்பூர் அருகே உள்ள கடேச்சூர்-பாடிஹாள் தொழில்பேட்டையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் நேற்று விஷவாயு திடீரெனக் கசிந்தது.இதில் அங்குப் பணியில் இருந்த தொழிலாளர்களுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் சிக்கி மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் விஷவாயுவைச் சுவாசித்து ஆபத்தான நிலையில் இருந்த 2 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவல் அறிந்த சைதாப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். யாதகிரி எஸ்பி பிரித்விக் சங்கர் நேரில் சென்று விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து விவரங்களைச் சேகரித்தார்.இதைத் தொடர்ந்து அந்தத் தொழிற்சாலையின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து சைதாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.











