Home செய்திகள் தேசிய செய்திகள் கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்குக் கொண்டுவர அரசு முடிவு

கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்குக் கொண்டுவர அரசு முடிவு

புதுடில்லி, ஆக. 24- நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது. டில்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெங்காய விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், மத்திய அரசு தனது இருப்பில் உள்ள வெங்காயத்தை நேரடியாகச் சில்லறை விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புக்கள் மூலம் இந்த விற்பனை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. நாசிக்கிலிருந்து டில்லி, சென்னை, கொச்சி மற்றும் குவஹாத்திக்கு இன்று முதல் மத்திய அரசு வெங்காயத்தை ஏற்றிச் செல்லும் ரயில்களை (கண்டா எக்ஸ்பிரஸ்) இயக்க உள்ளது. உயர்ந்து வரும் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசு கடைசியாக 2024 அக்டோபரில் நாசிக்கிலிருந்து டில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு கண்டா எக்ஸ்பிரஸை இயக்கியது. தரவுகளின்படி, டில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை, ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.35 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆக உள்ளது. சென்னையில், கடந்த ஆண்டு ரூ.33 ஆக இருந்த வெங்காயம், தற்போது ரூ.58க்கு விற்கப்படுகிறது. கேரளா மற்றும் அசாமின் சில பகுதிகளிலும் வெங்காய விலை உயர்ந்துள்ளது. மாநிலங்களில் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருக்கும் மஹாராஷ்டிராவில் காரிப் பருவ வெங்காய உற்பத்தியில் 5% முதல் 7% வரை சரிவு ஏற்பட்டதே விலை உயர்வுக்கு காரணம் ஆகும். விவசாயிகள் கூட்டுறவு சங்கமும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பும் நடப்பு நிதியாண்டிற்காகக் கையிருப்புக்காக 1.2 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்துள்ளன. முன்னதாக மே மாதத்தில், ஒரு குவிண்டால் வெங்காயத்தின் கொள்முதல் விலை ரூ.1,270 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது; கொள்முதலை விரைவுபடுத்துவதற்காகக் கடந்த வாரம் அந்த விலை ரூ.2,645 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.