
பீட், செப். 3- மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டத்திலுள்ள தஹிபாலே குடும்பத்தில் நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளாக இந்தக் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்காத நிலையில், தற்போது பிறந்த குழந்தைக்கு ‘கார்கி’ என்று பெயரிட்டுள்ளனர். மருத்துவமனையில் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய தாயையும் குழந்தையையும் குடும்பத்தினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேளதாளங்கள் முழங்க, கிராமிய நடனங்களுக்கு நடுவே அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் தாயையும் குழந்தையையும் ஊர்வலமாக வீடு அழைத்துச் சென்றனர். குழந்தையின் தாத்தா லிம்பாஜி தஹிபாலே, “குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறப்பது பெரும் பாக்கியம். பல ஆண்டுகளாக பெண் இல்லாத குறை இருந்தது, இன்று அது நிறைவேறியுள்ளது,” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.
குழந்தையின் பாட்டி சுரேகா தஹிபாலே, “இன்று எங்கள் வீட்டுக்கு லட்சுமி வந்திருக்கிறாள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார். குழந்தையின் தந்தை, “பெண் குழந்தை பெறும் மகிழ்ச்சியும் அனுபவமும் வேறுவிதமானது. மகள்கள் தந்தையிடம் அதிக பாசம் கொண்டவர்கள். எங்கள் மகளை ஒரு மலரைப் போல வளர்ப்போம்,” என்று கூறினார். இந்த நிகழ்வைப் பாராட்டிய சமூக ஆர்வலர் அனந்த் இங்கிலே, “சமூகத்தில் இன்னும் சில பிரிவினரிடையே பெண் குழந்தை குறித்த குறுகிய மனநிலை நிலவுகிறது. ஆனால்,
தஹிபாலே குடும்பம் கார்கியின் பிறப்பைக் கொண்டாடி, சமூகத்திற்கு நேர்மறையான செய்தியை அனுப்பியுள்ளது,” என்று பாராட்டினார்.













