
இஸ்லாமாபாத்: செப்.6-
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலைப் படை (பிஎல்ஏ) நடத்திய இரு வேறு தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 25 பேர் உயிரிழந்தனர்.
பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மிகப்பெரிய பிரதேசமாகும். அங்கு அரசியல் அடக்குமுறைகள் மற்றும் ராணுவக் கெடுபிடிகளுக்கு எதிராக பிரிவினைவாதிகள் சுயாட்சி கோரி போராடி வருகின்றனர். இந்நிலையில், ஜியாரத் கிராஸ் பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது ‘ஃபாத்தே ஸ்குவாட்’ படை நடத்திய தாக்குதலில் 18 வீரர்களும், ஹாஜிகா பகுதியில் சிறப்பு அதிரடிப் படை நடத்திய தாக்குதலில் 7 வீரர்களும் கொல்லப்பட்டதாக பிஎல்ஏ தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பிஎல்ஏ மற்றும் தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்புகளைச் சேர்ந்த 48 பேர் கொல்லப்பட்டனர்.













