Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடகத்தில் போக்ஸோ வழக்குகள் : 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பதிவு

கர்நாடகத்தில் போக்ஸோ வழக்குகள் : 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பதிவு

பெங்களூரு, செப். 6-
கர்நாடக மாநிலத்தில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரங்கள் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
மாநிலத்தில் தினமும் சராசரியாக 7 முதல் 8 வழக்குகள் பதிவாகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், அக்கம் பக்கத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள் எனப் பழகியவர்களே இந்த கொடூர சம்பவங்களில் அதிகம் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
முன்பெல்லாம் மானத்திற்கு பயந்து வழக்குகளை மூடி மறைத்த நிலை இருந்தது. ஆனால் தற்போது சட்ட விழிப்புணர்வால் மக்கள் தைரியமாக புகாரளிக்க முன்வருகின்றனர். தலைநகர் பெங்களூருவில் அதிகபட்சமாக 2,271 வழக்குகளும், சிவமோக்காவில் 903 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
புதிய சட்டப்படி 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க பெங்களூரு தவிர மற்ற மாவட்டங்களில் ‘அக்கா படை’ களமிறக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் 7,500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
குழந்தைகள் உதவி எண்: 1098 | காவல்துறை உதவி எண்: 22943225