
சண்டிகர், செப். 6: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சீதாராம். 35 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவின் தனது சொந்த ஊரிலிருந்து பிழைப்புக்காக பஞ்சாபுக்குச் சென்றவர். மாற்றுத் திறனாளியான அவருக்கு பஞ்சாப் மாநில அரசில் டி பிரிவில் வேலை கிடைத்து அங்கேயே வாழ்ந்தார். சமீபத்தில், எஸ்ஐஆர் நடவடிக்கைக்காக ஹரியானாவின் ஜிந்த் மாவட்டம் மனோகர்பூர் கிராமத்தில் இருந்த தனது பள்ளிச் சான்றிதழை பெற சென்றார். அப்போது, அதிகாரிகள் சான்றிதழை தேடும்போது, அவரது குடும்பம் தொடர்பான தகவல் தெரியவந்தது. அங்குள்ள பள்ளி ஊழியர்கள், சீதாராமின் அண்ணன் கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர். அப்போது தான் சீதாராம் உயிருடன் இருப்பது கிருஷ்ணாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணா உடனடியாக அங்குள்ள வாக்குச் சாவடி நிலை அதிகாரியை (பிஎல்ஓ) தொடர்பு கொண்டு உறுதி செய்தார். பின்னர், கிருஷ்ணா பள்ளிக்கு வந்து, தனது தம்பி சீதாராமை கட்டியணைத்து வரவேற்றார். கிருஷ்ணாவின் மனைவி, குழந்தைகள் உள்பட அனைவரும் சீதாராமை சந்தித்து ஆனந்தக் கண்கலித்தனர். அவர்கள் பின் ஒரே வாகனத்தில் பள்ளியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். 35 ஆண்டுகளுக்குப் பிறகு சீதாராம் தனது குடும்பத்தாருடன் இணைந்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து மேலும் உதவி தேர்தல் பதிவு அதிகாரி (ஏஇஆர்ஓ) டாக்டர் ரமேஷ் குமார் கூறியபோது, “தலைமைத் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன், தம்பி இணைந்துள்ளனர். பிரிந்திருந்த குடும்பம் தற்சமயம் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.













