
விஜயவாடா: செப்டம்பர் 9-
நடிகர் சிரஞ்சீவியின் மகளும் தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதா, விஜயவாடாவின் பிரபலமான இந்திரகீலாத்ரி துர்கம்மா தேவஸ்தான அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், தேவஸ்தானத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் சுஷ்மிதாவுக்கு முக்கிய பங்கு அளிக்கிறது.
அறங்காவலர் குழு மற்றும் நிர்வாக அதிகாரிகளின் பணிகளை மேம்படுத்தும் ஆலோசனைகளை வழங்குவதுடன், முக்கிய திருவிழாக்கள் மற்றும் ஜாத்திரை காலங்களில் தேவஸ்தான நிர்வாகத்துக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதும் சுஷ்மிதாவின் பொறுப்பாக இருக்கும்.
சிரஞ்சீவி குடும்பம் ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று வருகின்றது. சிரஞ்சீவியின் மனைவி சுரேகா தேவஸ்தான குழுவில் உறுப்பினராக இருக்க, அவரது சகோதரர் பவன் கல்யாண், ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியாக பணியாற்றுகிறார். மற்றொரு சகோதரரான நாகபாபு சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார்.
இந்த வரிசையில் சுஷ்மிதா இந்த புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். சினிமா துறையில் மட்டுமின்றி, பொதுவாழ்விலும் சிரஞ்சீவி குடும்பம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, துர்கம்மா தேவஸ்தானத்தில் சுஷ்மிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.













