
புதுடெல்லி, செப். 9- சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. பிரெண்ட் ரக எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலரை நெருங்கியதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு மற்றும் பணவீக்கம் அதிகரிக்க முடியும்.இந்தியா தனது எண்ணெய் தேவையின் 88 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. விலை உயர்வு, டாலர் அடிப்படையிலான செலவினை உயர்த்துவதோடு, வர்த்தக சமநிலை மற்றும் ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏப்ரல்-ஜூலை காலத்தில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு 56 சதவீதம் உயர்ந்து ரூ.6 லட்சம் கோடியாக (63.4 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.3 லட்சத்து 82 ஆயிரம் கோடியாக (40.5 பில்லியன் டாலர்) இருந்தது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த விலை உயர்வு அவற்றின் லாப வரம்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி வினியோகம் பாதிக்கப்படுவதால், எண்ணெய் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இறக்குமதி எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ரூ.9,519 (100.75 டாலர்) ஆக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் மானிய இழப்பு ஆகிய சவால்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.













