
கொழும்பு: செப். 9-
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை துணை ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகரா உற்சாக வரவேற்பளித்தார். அவருடன், இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பயணத்துக்குப் புறப்படும் முன், ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த பயணம் இலங்கை தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான சந்திப்புகளுக்கான வாய்ப்பு. புலம்பெயர் இந்தியர்களுடனும் உரையாட முடியும். இந்தியா-இலங்கை உறவுகள் வரலாற்று மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஆழமானவை. இந்தியாவின் அண்டை நாடுகள் முதலில் மற்றும் மகாசாகர் முன்முயற்சிகளில் இலங்கையின் முக்கியத்துவம் அதிகம்,” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தின்போது, ராஜ்நாத் சிங், உயர்மட்டக் குழுவுடன் இணைந்து, கடல்சார் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கைத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தியா, புயலுக்குப் பிந்தைய புனரமைப்பிற்காக இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்திய தூதர் சந்தோஷ் ஜா, “கடந்த மூன்று ஆண்டுகளில் இருதரப்பு உறவுகள் புதிய தீவிரத்தை அடைந்துள்ளன. பாதுகாப்பு மற்றும் தற்காப்பு முக்கிய அம்சங்கள். ராஜ்நாத் சிங்கின் பயணம் பாதுகாப்பு முயற்சிகளை முன்னெடுக்கும்,” எனத் தெரிவித்தார்.













