Home பக்தி திருச்செந்தூர் தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூர் தேரோட்டம் கோலாகலம்

தூத்துக்குடி, செப். 10- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆவணித் திருவிழா ஆக. 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கப் பெருமானும், வள்ளி அம்மனும் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார்.
காலை 7 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் முதலில் இழுத்தனர்.
அந்தத் தேர் நான்கு ரத வீதிகளைச் சுற்றி காலை 7.35 மணிக்கு நிலைக்கு வந்தது. அடுத்ததாக, வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப் பெருமான் எழுந்தருளிய பெரிய தேரை காலை 7.45 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷம் விண்ணதிர எதிரொலித்தது. இந்தத் தேர் ரத வீதிகளைச் சுற்றி காலை 8.40 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. பின்னர், வள்ளி அம்மன் தேர் புறப்பட்டு ரத வீதிகளைச் சுற்றி மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது.தேரோட்ட நிகழ்வில் திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள், மாவட்ட நீதிபதி வசித்குமார், கோயில் இணை ஆணையர் ஆ.அருணாசலம், துணை ஆணையர் யக்ஞ நாராயணன், உதவி ஆணையர் லோகநாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.