
திருமலை, அக். 8- திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பிறரின் உதவியின்றி தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை எளிதாகச் சென்றடையும் வகையில், திருமலை தேவஸ்தானம் சார்பில் ‘கருட மேப்’ என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. திருமலை தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து இந்தச் செயலி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் செல்ல விரும்பும் இடத்தின் பெயரை செயலியில் உள்ளிடுவதன் மூலமாகவோ,
குரல் கட்டளை வழங்குவதன் மூலமாகவோ அந்த இடத்துக்குச் செல்லும் வழியை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
திருமலையில் உள்ள அனைத்து சுப இடங்களும் செயலியில் இடம்பெறும். அந்த இடங்களுக்கு செல்வதற்கான பல்வேறு வழிகளும் இதில் காட்டப்படும். குறிப்பிட்ட இடத்தை நடந்துசெல்ல வேண்டிய தூரம், வாகனத்தில் செல்ல வேண்டிய தூரம், சென்றடைய ஆகும் நேரம் ஆகிய விவரங்களும் செயலியில் தெரிவிக்கப்படும்.
மேலும், விரைவாக சென்றடையக்கூடிய எளிதான வழியையும் செயலி குறிப்பிடும். பல்வேறு வகையான தரிசன நுழைவாயில்கள், வரிசை வளாகங்கள், லட்டு மையங்கள், விருந்தினர் இல்லங்கள், உணவுக் கூடங்கள், குடிநீர் மையங்கள், மருத்துவ மையங்கள் உள்ளிட்டவற்றின் முழுமையான தகவல்களையும் பக்தர்கள் இந்தச் செயலி மூலம் பெற முடியும்.
இதன் மூலம் திருமலைக்கு புதிதாக வரும் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான இடங்களை எளிதாகக் கண்டறிந்து செல்ல முடியும். இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 78,777 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,244 பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியலில் ரூ.4.35 கோடி காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
















