
குலசேகரன்பட்டினம், அக். 21- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்தனர். விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அக்னிச்சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும், காளி வேடம் அணிந்தும் ஊர்வலமாக வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். குலசை சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்ததால் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. இரவு 10 மணிக்கு முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
பின்னர் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் கடற்கரைக்கு எழுந்தருளிய அம்மன், முதலில் மகிஷாசூரன், பின்னர் சிங்கம், எருமை, சேவல் ஆகிய உருவங்களில் வந்த அவனை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என கோஷமிட்டனர். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவையொட்டி சிறப்பு பஸ்கள், தற்காலிக பஸ் நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடலில் மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று திருவீதி உலா, கொடி இறக்கம், காப்பு களைதல் நடைபெறுகிறது. நாளை மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
















