Home செய்திகள் உலக செய்திகள் டிரம்ப் விளம்பரத்தில் இனவெறி: இந்தியர்கள், சீக்கியர்களுக்கு எதிரான வாசகத்தால் கடும் சர்ச்சை

டிரம்ப் விளம்பரத்தில் இனவெறி: இந்தியர்கள், சீக்கியர்களுக்கு எதிரான வாசகத்தால் கடும் சர்ச்சை

வாஷிங்டன், செப். 11: அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், சட்டவிரோதமாக குடியிருப்பவர்களுக்கு எதிராக வெளியிட்டுள்ள விளம்பரம் கடும் சர்ச்சையையும், இனவெறி குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் பதவியேற்றது முதல், குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. மேலும், சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை, சட்டவிரோதமாக குடியிருப்பவர்களுக்கு எதிராகப் புதிய விளம்பரம் ஒன்றை உருவாக்கியுள்ளது. பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘டிரான்ஸ்பார்மர்ஸ்’ படத்தின் பாணியில் இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், அந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆப்டிமஸ் பிரைம் என்ற இயந்திர மனிதன், அமெரிக்க சின்னத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. தாடி வைத்த, இந்தியர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை அது எதிர்கொள்வது போன்ற காட்சியும் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன், ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே; எங்கள் சாலைகளில் வராமல் விலகி நில்லுங்கள்; உங்களுக்கு வண்டி ஓட்டக் கூட தெரியாது மிஸ்டர் சிங்’ என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. ‘மிஸ்டர் சிங்’ என்ற குறிப்பிடுதல், இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்களை குறிவைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்காவில் மிகப் பெரிய டிரக்குகளை இயக்கும் டிரைவர்களில், இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.