
புதுடில்லி: செப். 11-
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டின்படி, இந்திய ராணுவத்திடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம். அணு ஆயுதங்களைத் தொடர்ந்து அதிகரிப்பதுடன், அவற்றை நவீனப்படுத்தும் பணிகளிலும் இந்தியா ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கே சீனாவும், மேற்கே பாகிஸ்தானும் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன. இதை எதிர்கொள்ள மத்திய அரசு ராணுவப் பலத்தை அதிகரித்து வருகிறது. அதிநவீன ராணுவத் தளவாடங்கள், டிஜிட்டல் போர்க் கருவிகள், ராணுவத் தொழில்நுட்பங்களை அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் இருந்து இந்தியா வாங்கி வருகிறது.பல்வேறு நாடுகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், செயற்கைக்கோள் படங்கள், பொது தகவல்கள் அடிப்படையில் இந்த மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை ஏவக்கூடிய படை அமைப்பு, திறன் தொடர்பான தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில் தற்போது 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என அறிக்கை கூறுகிறது. இதில் 178 அணுகுண்டுகள் ஏவுகணைகளில் பொருத்தப்படாமல், மத்திய ஆயுதச் சேமிப்புக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருக்கலாம்.
இந்தியாவிடம் தற்போது அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் திறன்படைத்த ஒன்பது அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் வான்வழித் தாக்குதலுக்கான இரண்டு அமைப்புகளும், தரைவழித் தாக்குதலுக்கான ஆறு ஏவுகணை அமைப்புகளும் அடங்கும்.மேலும் இரண்டுபுதிய அமைப்புகள் எதிர்காலத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.செயல்பாட்டிலுள்ள ஏவுதிறன் அமைப்புகள் மூலம் 160-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று எதிரி இலக்குகளைத் தாக்க முடியும். புதிதாகப் படையில் இணைக்கப்படும் ஏவுகணைகளுக்காக அணு ஆயுதங்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடல்வழி அணு ஆயுத அச்சுறுத்தலைச் சமாளிக்கும் திறனும் இந்தியாவிடம் விரிவடைந்து வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிதமன், கடந்த ஏப்ரலில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் 2027-ல் படையில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
. புதிய ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதக் கையிருப்பு அதிகரிக்கலாம்.சர்வதேச அணு ஆற்றல் மூலப்பொருட்களுக்கான குழுவின் கணக்கீட்டின்படி, 2026 தொடக்கத்தில் இந்தியா 730 கிலோ புளூட்டோனியம் உற்பத்தி செய்துள்ளது. இதில் 170 கிலோ வரை கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். ஓர் அணுகுண்டு தயாரிக்க சராசரியாக நான்கு கிலோ புளூட்டோனியம் தேவை. எனவே, இந்தியாவிடம் உள்ள புளூட்டோனியத்தால் 140 முதல் 225 அணுகுண்டுகள் வரை தயாரிக்க முடியும்.இந்தியாவின் அணு ஆயுதக் கையிருப்பு பாகிஸ்தானைவிட அதிகம். ஆனால், சீனா, ரஷ்யா, அமெரிக்காவைவிட கணிசமாகக் குறைவு. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒன்பது அணு ஆயுத நாடுகளிடம் 12,187 அணுகுண்டுகள் இருக்கலாம் எனத் தெரியவந்தது. இதில் 9,754 அணுகுண்டுகள் ராணுவக் கையிருப்பில் உள்ளன.இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை பாகிஸ்தானை மையப்படுத்தி அமைந்துள்ளது. அணு ஆயுத நவீனமயமாக்கல் திட்டமும் அதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. எனினும், நீண்டதூர ஏவுகணைகள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் திறன் அதிகரிப்பதன் மூலம், சீனாவையும் எதிர்கொள்ளும் அளவுக்கு இந்தியாவின் அணு ஆயுதத் தடுப்புத் திறன் வலுவடைந்துள்ளது.அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு வெளியிட்ட 190 அணு ஆயுதங்கள் என்ற மதிப்பீடு, இந்திய அரசின் அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரம் அல்ல. துல்லியமான அணு ஆயுதக் கையிருப்பு தெரியவில்லை என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அணு ஆயுத நாடுகளின் எண்ணிக்கை: இந்தியா 190, பாகிஸ்தான் 170, சீனா 620, அமெரிக்கா 3,700, ரஷ்யா 4,400.












