Home மாவட்டங்கள் பெங்களூர் டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் கர்நாடகத் தமிழர் நாள் விழா கொண்டாட்டம்

டாக்டர் பா.சு.மணி நூலகத்தில் கர்நாடகத் தமிழர் நாள் விழா கொண்டாட்டம்

பெங்களூரு: செப். 11:
பெங்களூரில் உள்ள தமிழ் இதழியல் செம்மல் பா.சு.மணி நூலகத்தில் கர்நாடகத் தமிழர் நாள்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கர்நாடக தமிழ் இதழியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, 1964ஆம் ஆண்டு பிப்.7ஆம் தேதி ‘தினச்சுடர்’ தமிழ் மாலை நாளிதழ் தொடங்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வுக்கு சொந்தக்காரர் தமிழ் இதழியல் செம்மல் முனைவர் பா.சு.மணி. அன்று முதல் இன்று வரை கர்நாடகத்தமிழரின் வாழ்வியலின் காலக்கண்ணாடியாகவும், வரலாற்று சாட்சியாகவும் திகழ்ந்து வரும் மாபெரும் சாதனையை ‘தினச்சுடர்’ நிகழ்த்திக்கொண்டுள்ளது. மாலையில் உதிக்கும் சூரியனை போல தினந்தோறும் தமிழரின் செய்திகளை தாங்கிவரும் ‘தினச்சுடர்’, கர்நாடகத் தமிழரின் இன்றியமையாத உறவாக மாறியுள்ளது. கடந்த 62 ஆண்டுகளில் ‘தினச்சுடர்’ மாலை நாளிதழ் நிகழ்த்தி வரும் சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்து, வரலாற்றில் சாகாவரம் பெற்று விளங்கும் தமிழ் இதழியல் செம்மல் முனைவர் பா.சு.மணி அவர்களை காலம் என்றைக்கும் பாதுகாத்து, அவரது புகழை நிலையாக பத்திரப்படுத்த வேண்டும். தமிழ் இதழியல் செம்மல் முனைவர் பா.சு.மணி அவர்களின் அழிக்க முடியாத வரலாற்றுப்பணியை காலந்தோறும் நினைவுக்கூரும் முகமாக, அவரது பிறந்தநாளான செப்.11ஆம் தேதியை ‘கர்நாடகத் தமிழர் நாள்’ என்று கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், 2025ஆம் ஆண்டு அறிவித்தது. அன்றைக்கே, அவரது புகழை தாங்கிப்பிடிக்கும் தமிழ் இதழியல் செம்மல் பா.சு.மணி நூலகம், பா.சு.மணி கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைப்பாற்றல் மையம், பா.சு.மணி ஐஏஎஸ் படிப்புவட்டம் ஆகிய அமைப்புகளை கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் தொடங்கி, கடந்த ஓராண்டாக சிறப்பாக நடத்தி வருகிறது. கர்நாடகத்தின் அழிக்கமுடியாத தடமாக விளங்கும் ‘தினச்சுடர்’ தமிழ் மாலை நாளிதழ், அதன் நிறுவனர் முனைவர் பா.சு.மணி அவர்களின் புகழை ஓங்கி ஒலிக்கச்செய்யும் வகையில், கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டாக செப்.11ஆம் தேதியை ‘கர்நாடகத் தமிழர் நாள்’ என்று கொண்டாடும் விழா முன்னெடுக்கப்பட்டது.
பெங்களூரு, குயின்ஸ் சாலையில் தினச்சுடர் அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ள தமிழ் இதழியல் செம்மல் பா.சு.மணி நூலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழ் இதழியல் செம்மல் முனைவர் பா.சு.மணி அவர்களின் பிறந்தநாள் ‘கர்நாடகத் தமிழர் நாள்’ ஆக கொண்டாடப்பட்டது. கோலாகலமாக நடந்த இந்த விழாவுக்கு கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கச்செயலாளர் ஆ.வீ.மதியழகன் தலைமை வகித்தார். பா.சு.மணி நூலக வழிகாட்டுதல் குழுவின் தலைவர் பெ.சங்கரதாஸ், அனைவரையும் வரவேற்று பேசினார். பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், வாழ்த்துரை வழங்கினார். தினச்சுடர், சஞ்சேவணி நாளிதழ்களின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் பா.தே.அமுதன், தனது தந்தையும், தினச்சுடர், சஞ்சேவாணி நாளிதழ்களின் நிறுவனரும், கர்நாடகத் தமிழர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் தமிழ் இதழியல் செம்மலுமான முனைவர் பா.சு.மணி அவர்களின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி புகழஞ்சலி செலுத்தினார். பா.சு.மணி புகழ் ஓங்குக என்று முழக்கம் எழுப்பி, பா.சு.மணி அவர்களுக்கு அனைவரும் வீரவணக்கம் செலுத்தினர். நிறைவாக,பா.சு.மணி கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைப்பாற்றல் மையத்தின் வழிகாட்டுதல் குழுத்தலைவர் முனைவர் மு.இரகுராமன் நன்றிக்கூறினார். முனைவர் பா.சு.மணி அவர்களின் பிறந்தநாள், கர்நாடகத் தமிழர்நாள்விழாவை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், பா.சு.மணி நூலகம், பா.சு.மணி கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைப்பாற்றல் மையம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, தினச்சுடர், சஞ்சேவாணி ஆசிரியர், பதிப்பாளர் பா.தே.அமுதன் அனைவருக்கும் கர்நாடகத் தமிழர் நாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டார்.