
திருச்சி: செப். 12 –
தமிழகம் முழுவதும் 52 கோவில்களில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பதற்காக ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
திருச்சியைப் பொறுத்தவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களில் செல்போன் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டிருந்தது.
செல்போன்களை பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறைக்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. சில கோவில்களில் டோக்கன் வழங்கும் இடங்களில் சில்லரைத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அவ்வப்போது வாக்குவாதமும் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருச்சியில் உள்ள 5 பிரதான கோவில்களிலும் செல்போன்களை பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு அறையில் உள்ள லாக்கரில் வைத்து, அதற்கான டோக்கனை மட்டும் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
















