
சென்னை, செப். 12- அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அடுத்த மாதத்திற்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான சிறந்த முயற்சியாக இதை வரவேற்கலாம். ஆனால், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை விலக்கிவிட்டு அரசு ஊழியர்களுக்கு மட்டும் இக்கட்டுப்பாட்டை விதிப்பது ஊழலை ஒழிக்க உதவாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் 7(3) பிரிவில், முந்தைய திமுக அரசு கடந்த ஜனவரி மாதம் செய்த திருத்தத்தின்படி, அனைத்து நிலை அரசு ஊழியர்களும் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி தங்களது பெயரிலும், குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள், வாகனங்கள், நகைகள், வங்கி வைப்பீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள், கடன்கள் ஆகிய விவரங்களை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்புக்கான தளத்தில் தனித்தனி படிவங்களில் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படியான அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தாக்கல் செய்யப்படாத நிலையில், அவற்றை அக்டோபர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்பட்டு, பதவி உயர்வு பாதிக்கப்படும்
















