
கேரளா: செப்.15-
கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து மெட்டா நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில மின்வாரிய ஊழியர்களுடன் முதல்-மந்திரி வி.டி. சதீசன் நடனமாடுவது போன்ற அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. திருச்சூரைச் சேர்ந்த ‘ரீச் யூ டாட்’ நிறுவனத்தின் ‘ஏஐ காவாலா’ சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை உருவாக்கிய நிறுவனத்தின் உரிமையாளரான அபிஜித் கே.எஸ்., ஒரு புகாரின் அடிப்படையில் இந்தியாவில் அந்த வீடியோ நீக்கப்பட்டதாக மெட்டா நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு தகவல் வந்ததாக தெரிவித்தார். எனினும், வீடியோ நீக்கப்பட்டதற்கு எதிராக புகார் அளிக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, வீடியோ தொடர்பாக முதல்-மந்திரி வி.டி. சதீசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவை பார்த்து ரசித்ததாக கூறிய அவர், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் இதுபோன்ற படைப்புகள் தொடர்பாக சட்டரீதியான பிரச்சினைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.















