
புதுடெல்லி, செப். 17- பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பிரதமர் மோடிக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், “உலகின் மிகப் பிரபலமான தலைவருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரே இந்தியா, மிகச்சிறந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டவர் பிரதமர் மோடி. அவர் புதிய இந்தியாவின் சிற்பியும், நம்முடைய வழிகாட்டியும் ஆவார். 145 கோடி இந்தியர்களின் வாழ்வில் மகிழ்ச்சி, வளம், பாதுகாப்பு மற்றும் பெருமைக்கான புதிய விடியலை உருவாக்குவதற்கான தேசிய அளவிலான இடைவிடாத வேள்விக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டவர்” என்று யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். “தேசம் முதலில், பொதுமக்களின் நலன்” என்ற அடிப்படையில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்கை அடையும் நோக்கில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். அவரது உள்ளார்ந்த ஈடுபாடு ஓர் உந்துதலை ஏற்படுத்துகிறது என்றும் யோகி ஆதித்யநாத் தனது செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், பா.ஜ.க. தலைவர்களும் மத்திய மந்திரிகளும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.













