
சென்னை, செப். 17- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகே அமைந்துள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப் படத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழியை முன்மொழிய, தி.மு.க. உடன்பிறப்புகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்” என அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.















