
சென்னை, செப். 17- நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை கிழக்கு கடற்கரை சாலை சொத்து தொடர்பாக எம்.சி.சிவகாமி, எம்.சி.நடராஜன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு தரப்பினரும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டது. மேலும், போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை டிச.18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988-ம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் 2.7 ஏக்கர் நிலத்தை சம்பந்த முதலியாரின் குடும்பத்தினரிடம் இருந்து விலைக்கு வாங்கினார். கடந்த 37 ஆண்டுகளாக அந்தச் சொத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் மகன் நடராஜனும் மகள் சிவகாமியும், சொத்துக்கு உரிமை கோரி செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் எனக் கூறி செங்கல்பட்டு நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். போலி வாரிசுச் சான்றிதழ் மூலம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு உரிமை கோரப்படுவதால், நிலுவை வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கோரினர். உயர் நீதிமன்றம், சொத்தை அபகரிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டதாகக் கூறி, செங்கல்பட்டு வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிவகாமியும் நடராஜனும் உச்சநீதிமன்றத்தை அணுகினர். நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பள்ளி அமர்வில் விசாரணை நடந்தது. அவர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரன், சொத்தின் ஐந்தில் ஒரு பங்கு சந்திரசேகருக்குச் சொந்தமானது என்றும், அவரது சகோதர, சகோதரிகள் அவருக்குத் தெரியாமல் முறைகேடாக விற்றதால் விற்பனை ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.















