Home மாவட்டங்கள் சென்னை சிவகங்கை அருகே 2 இளைஞர்கள்கொலை: 5 பேர் கைது

சிவகங்கை அருகே 2 இளைஞர்கள்கொலை: 5 பேர் கைது

சிவகங்கை, செப். 17- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பழமலைநகர் பின்புறம் உள்ள பையூர் கொடிக்காடு கண்மாய் கரையில் நேற்று 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி வாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டியன் ஆகியோரே உயிரிழந்தவர்கள் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
தெய்வேந்திரன் புதிதாக வாங்கிய காரை முதல் சர்வீஸுக்காக மாருதி ஷோரூமில் விட்டுவிட்டு, மீண்டும் காரை எடுக்கச் சென்றபோது இந்த கொலைச் சம்பவம் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அந்த தனிப்படைகள் கொலை தொடர்பான தகவல்களைச் சேகரித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டன.
சம்பவம் நடைபெற்ற இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதேபோல், அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் அழைப்பிகளின் விவரங்களும் பரிசீலிக்கப்பட்டன. இவ்வாறு கிடைத்த தகவல்கள் மற்றும் விசாரணை அடிப்படையில் வழக்கில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பாலமுருகன், தனராஜ், சந்தோஷ், சதீஷ்குமார் மற்றும் காளீஸ்வரன் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.