
புதுடில்லி, செப். 18- பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களால் நாடு முழுவதிலுமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார் என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும், ஒவ்வொரு கிராமமும், குடியிருப்புப் பகுதியும் பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்களின் மையமாக உள்ளன. இந்த வளர்ச்சித் திட்டங்களின் மூலம் அவர் நாடு முழுவதிலுமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார். அவருக்கு அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தொடர்ந்து ஆசீர்வாதங்கள் குவிந்து வருகின்றன.காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ராகுலை மாற்ற வேண்டும் என்று எழுந்துள்ள உட்கட்சி அதிருப்திகளை மறைப்பதற்காகவே, மாணவர் மற்றும் இளைஞர் எழுச்சிப் பேரணிகள் பயன்படுத்தப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இளைஞர்களுக்கு முறையான வாய்ப்புகளோ, கடனுதவிகளோ வழங்கப்படவில்லை. தற்போது வெறும் அரசியல் லாபத்துக்காகவே ராகுல் இளைஞர்களைப் பற்றிப் பேசி வருகிறார். இவ்வாறு நிதின் நபின் தெரிவித்தார்.













