
புதுடில்லி, செப். 18- உலக நாடுகள் புதிய, நம்பகமான உற்பத்தி மையங்களை எதிர்பார்க்கும் நிலையில், அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா தொடர்ந்து தன்னைத் தயார்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 3 நாட்கள் நடைபெறும் செமிகான் இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: உலகளாவிய புதிய உற்பத்திச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நம்பகமான இடமாக இந்தியா மாறியுள்ளது. இன்றைய சூழலில் உலகம் புதிய, நம்பகமான உற்பத்தி மையங்களை எதிர்பார்க்கிறது. அதற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா தயாராகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், வெறும் டிரான்சிஸ்டர் அளவை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நினைவக அமைப்பு, வெப்ப மேலாண்மை உள்ளிட்ட முழுமையான ஒருங்கிணைந்த அமைப்புகளிலும் கவனம் செலுத்துவது அவசியம். ஒருபுறம் இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது; மறுபுறம் நாட்டின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. சவால்கள் நிறைந்த உலகளாவிய சூழலிலும் இந்தியா 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேவேளையில், ஜப்பானின் கடன் தரநிர்ணய அமைப்பும் இந்தியாவின் இறையாண்மைக்கான தரவரிசையை உயர்த்தியுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் லட்சியத்துடன் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவின் செமிகண்டக்டர் கட்டமைப்பு மிகவேகமாக விரிவடைந்து வருகிறது. இது கண்டுபிடிப்புகள், முதலீடுகள் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது. இந்தியாவில் ஆராய்ச்சி செய்து வரும் இளம் திறமையாளர்களும், வெளிநாடுகளில் உள்ள இந்திய ஆராய்ச்சியாளர்களும் நாட்டின் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இணைய முன்வர வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.













