
புதுடில்லி, செப். 18- இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மசோதா, நியூசிலாந்து பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை நியூசிலாந்து பார்லிமென்ட் நிறைவேற்றியது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் ஆதரவுடன், இந்தச் சட்டம் 93-29 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சட்டம் அமலுக்கு வரும் நாளிலிருந்து, அனைத்துப் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை வரி விலக்கு பெறும். நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படும். அதேபோல், நியூசிலாந்தின் பொருட்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவற்றுக்கு வரி விலக்கு வழங்கப்படும். மேலும், 95 சதவீதப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள் குறைக்கப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும். இதுதொடர்பாக, நியூசிலாந்து பார்லிமென்டில் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரி விலக்கு மற்றும் வரிக் குறைப்பு நடைமுறைகளை அமல்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.













