
புதுடெல்லி: செப்.18 –
டில்லியில் நண்பரைச் சந்திக்கச் சென்ற 16 வயது சிறுமி, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, 6 முறைக்கு மேல் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியின் சுவரூப் நகர் பகுதியில், குஷக் சாலை அருகே உள்ள வெட்டவெளியில், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அழுகிய நிலையில் 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி, தனக்குத் தெரிந்த 17 வயது சிறுவனைச் சந்திக்க அந்தச் சிறுமி சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள், ஒரு டெம்போ வாகனத்துக்குள் வைத்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பின்னர் 6 முறை கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தைப் புதருக்குள் வீசியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 19 வயதான சிவம் என்ற வாலிபர் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை டில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், சந்தேகத்துக்கிடமான டெம்போ வாகனத்தைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரும் 72 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டனர். கொலைக்குப் பயன்படுத்திய கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக டில்லி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













