
சென்னை: செப். 19-
சென்னை தலைமைச்செயலகத்தில், முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழக அரசு மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம் இடையே நேற்று புரிந்துணர்வு
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டிஎல்எஃப் தரமணி வளாகத்தில் உலகளாவிய திறன் மையத்தை நிறுவுவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் ஜிசிசி வழித்தடத்தில் அமைந்துள்ள டிஎல்எஃப் டவுண்டவுன் தரமணி வளாகத்தில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க உள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமே தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்நிறுவனம் முதல் ஆண்டில் 250 பேருக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளது. மேலும், வரும் ஆண்டுகளில் அந்த மையத்தை விரிவாக்கம் செய்யும் வகையிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் முன்னணி மருந்தகச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் துறைகளில் வால்கிரீன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது முதல் உலகளாவிய
திறன் மையத்தை தமிழகத்தில் அமைக்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் வணிக சேவைகளை மையமாகக் கொண்டு இந்த திறன் மையம் செயல்பட உள்ளது.ஒப்பந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், தமிழகத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதலீட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் அந்த நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.













