Home செய்திகள் தேசிய செய்திகள் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து வேண்டாம்

4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து வேண்டாம்

டெல்லி: செப்.19-
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற முக்கிய எச்சரிக்கையை, இருமல் மருந்து பாட்டில்களின் லேபிளில் சிவப்பு நிறத்தில் இடம்பெறச் செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவு, மருந்துகள் தொடர்பான ஆலோசனைக் குழுவான (DCC) பரிசீலனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ‘தி எகனாமிக் டைம்ஸ்’ செய்தி தெரிவித்துள்ளது.
“எச்சரிக்கை: 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்தைப் பயன்படுத்தக் கூடாது” என்ற வாசகம் பாட்டில் லேபிளில் இடம்பெற வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வயது குழந்தைகளின் படத்தையும் லேபிளில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த மருந்து வயதான குழந்தைகளுக்கானது என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுப்பதே நோக்கமாகும்.
இந்த மாற்றத்தை அமல்படுத்த, 1945-ம் ஆண்டு மருந்துகள் விதிகளின் 96-வது விதியில் திருத்தம் செய்ய வேண்டும். DCC-யின் ஆலோசனை மற்றும் அடுத்தகட்ட ஒழுங்குமுறை நடைமுறைகளுக்குப் பிறகே மாற்றம் அமலுக்கு வரும். சிறு குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகள் பயன்படுத்தப்படுவது குறித்து தொடர்ந்து கவலைகள் எழுந்துள்ளன. 2025 அக்டோபரில், குழந்தைகள் மருத்துவப் பராமரிப்பில் இத்தகைய மருந்துகளை கவனமாகப் பரிந்துரைத்து வழங்க வேண்டும் என சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் (DGHS) அறிவுறுத்தியது. குறிப்பாக, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இம்மருந்துகளைப் பரிந்துரைக்கவோ வழங்கவோ கூடாது எனத் தெரிவித்தது. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் தொடர்ந்து வழங்கப்படுவது தொடர்பான புகார், மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) உள்துறை தொழில்நுட்பக் குழுவால் 2026 ஏப்ரலில் பரிசீலிக்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ICMR) ஆலோசனை பெறவும், லேபிள் மாற்றங்களின் ஒழுங்குமுறை மற்றும் சந்தைப்படுத்தல் சாத்தியக்கூறுகள் குறித்து பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தவும் குழு பரிந்துரைத்தது. ஆனால், இருமல் மருந்து லேபிள் தொடர்பாக எந்தப் பணியும் மேற்கொள்ளவில்லை என ICMR தெரிவித்தது.