
புதுடெல்லி, செப். 19- டெல்லி வடக்கு மாவட்டம், மால் ரோடு பகுதியில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.4.31 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், வீட்டு வேலைக்காரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொழிலதிபரின் குடும்பத்தினர் கடந்த 2-ந்தேதி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றனர். வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்ட, அந்த வீட்டில் புதிதாக வேலைக்கு சேர்ந்த கமல் என்ற அனில் காமத் மற்றும் அவரது கூட்டாளிகள், கடந்த 5-ந்தேதி இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கடந்த 6-ந்தேதி காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்த மேலாளர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வடக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார், சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்ளையர்கள் டெல்லியில் இருந்து தப்பி ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி போலீசார் ஜார்கண்ட் மாநிலத்துக்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த 17 வயது சிறுவனைப் பிடித்தனர். அவன் அளித்த தகவலின் பேரில், பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள சுகா நகர் கிராமத்துக்குப் போலீசார் சென்றனர். அங்கு கமலின் மாமனாரான தேவ சந்திர சா (வயது 49) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது வீட்டில் நகைகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், ஒரு அறையின் தரைப்பகுதி புதிதாகப் பூசப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த இடத்தை 5 அடி ஆழத்துக்கு தோண்டியபோது, உள்ளே ஒரு பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.













