
புதுடெல்லி, செப். 19- மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த அக்கட்சியின் இரு பிரிவுகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்ததை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “முதலில் சிவசேனா, பின்னர் தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணமூல் காங்கிரஸ். ஒவ்வொரு முறையும் அதே பாணிதான். ஒரு கட்சியைப் பிளவுபடுத்த பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோக்கின்றன. பின்னர் அந்தக் கட்சியின் தேர்தல் சின்னம் பறிக்கப்படுகிறது.ஒரு முழு கட்சியையே அபகரிக்க முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளும் திருடப்படக்கூடும் என்பதில் ஆச்சரியமில்லை. வாக்குத் திருட்டு, அரசுத் திருட்டு, இப்போது கட்சித் திருட்டு. இவை அனைத்தும் நமது ஜனநாயகச் சரிவின் அடையாளங்களாகிவிட்டன. மக்களின் தீர்ப்பைப் பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்புச் சார்ந்த கடமை. ஆனால், அதற்கு மாறாக, மக்களின் தீர்ப்பைத் தலைகீழாக மாற்றும் சக்திகளுக்கே அது துணை நிற்கிறது. இந்தப் போராட்டம் மம்தா பானர்ஜியுடையது மட்டுமல்ல; சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் இது” என்று தெரிவித்துள்ளார்.













