Home மாவட்டங்கள் சென்னை நவம்பரில் 50 செ.மீ. மழைக்கு வாய்ப்பு

நவம்பரில் 50 செ.மீ. மழைக்கு வாய்ப்பு

சென்னை, செப். 24-
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பைவிட அதிக மழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் ஏதாவது ஓர் இடத்தில் நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேட்டூர் அணை, வைகை அணை ஆகியவை முழுமையாக நிரம்பாததுடன், தாமிரபரணி ஆற்றிலும் போதிய நீர்வரத்து இல்லை. சென்னை சுற்றுவட்டார ஏரிகளிலும் குடிநீருக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் இதே நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை ராஜஸ்தான் பகுதியில் இருந்து விலகத் தொடங்கியுள்ளதால், அக்டோபர் 10 அல்லது 12-ஆம் தேதிக்குள் அது முழுமையாக விலகும் எனக் கூறப்படுகிறது. அதன்பின் வடகிழக்கு பருவமழை தொடங்கும். தமிழ்நாட்டின் முக்கிய மழைப்பொழிவு வடகிழக்கு பருவமழை மூலமே கிடைக்கும் என்றும் ஹேமச்சந்தர் குறிப்பிட்டுள்ளார். அவரது கணிப்புப்படி, அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்தில் இயல்பான மழையளவு 44 செ.மீ. ஆகும். இந்த ஆண்டு 50 முதல் 60 செ.மீ.க்கு மேல் இயல்பைவிட அதிக மழை பதிவாகலாம். சூப்பர் எல்நினோ மற்றும் நேர்மறை வானிலை நிகழ்வுகள் இதற்கு சாதகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழைக்கும், குறுகிய நேரத்தில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். வடகடலோரம், காவிரி டெல்டா, தென் கடலோரம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிக மழை பெய்யலாம்.