
பெங்களூரு: செப். 24:
பெங்களூரு நகருக்கு நேற்று வந்த மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அங்குள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்துக்குச் சென்றார். அப்போது உணவகத்தின் சமையலறைக்குச் சென்ற அவர், வாடிக்கையாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் முன்னிலையில் தோசை சுட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.உணவக சமையலறையில் தோசை மாவை ஊற்றி, சுடச்சுட தோசையை தயாரித்த அமைச்சர், பின்னர் அந்தத் தோசையை அவரே வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறினார். தொடர்ந்து, ஃபில்டர் காஃபி தயாரித்து, நுரை பொங்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார். அமைச்சர் தோசை சுடுவதையும், அதனை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவதையும், காஃபி வழங்குவதையும் காணும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “பெங்களூரு வந்தால் ராமேஸ்வரம் கஃபே வராமல் இருக்க மாட்டேன். இன்று அங்கு சென்று தோசை சுட்டேன். வெளியில் இருந்து பார்ப்பதற்கு தோசை சுடுவது எளிதாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னணியில் கடின உழைப்பு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் கஃபேவில் அமைச்சர் நேரடியாகச் சென்று தோசை சுட்டதுடன், வாடிக்கையாளர்களுக்குத் தோசை மற்றும் ஃபில்டர் காஃபி வழங்கிய காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. மத்திய அமைச்சரின் இந்த ‘செஃப்’ அவதார வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.










