
சென்னை: செப். 24:
சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்காகக் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளை ரத்து செய்வதாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC) அறிவித்துள்ளது. சிங்கபெருமாள்கோவிலில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பூஞ்சேரி வரையிலான 27.34 கிலோமீட்டர் சாலைப் பணிகளுக்கான டெண்டர், நிறுவனங்களை 8 முதல் 9 மாதங்களாக ஆய்வு செய்த பின்னர், இறுதி ஒப்பந்தம் வழங்கப்பட இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி வரை 133 கிலோமீட்டர் நீளத்துக்கு பெரிஃபெரல் ரிங் ரோடு அமைக்கத் திட்டமிடப்பட்டது. நகருக்குள் செல்லாமல் லாரிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் பயணிக்க இந்தச் சாலை உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தத் திட்டம் 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், சிங்கபெருமாள்கோவில்–பூஞ்சேரி வழித்தடம் 5-வது மற்றும் இறுதிக்கட்டப் பகுதியாகும். சுமார் 27.34 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தச் சாலை, 6 முதன்மை வழிகள் மற்றும் இருபுறமும் தலா 2 சர்வீஸ் வழிகளுடன் 10 வழிச்சாலையாக அமைக்கத் திட்டமிடப்பட்டது. பெருமாள் ஏரியை கடக்கும் வகையில் 1.8 கிலோமீட்டர் நீள மேம்பாலம், கிராம மக்கள் பயன்படுத்த 8 சுரங்கப்பாதைகள், பெரிய வாகனங்களுக்கு 4 சுரங்கப்பாதைகள், ஏரிகள் மீது 6 பெரிய பாலங்கள் ஆகியவையும் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
கடந்த ஆண்டு இறுதியில் 4 தனித்தனி தொகுப்புகளாக டெண்டர் கோரப்பட்டு, பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திட்ட மதிப்பீடு, ஒப்பந்த விதிகள், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. செலவு மதிப்பீடு மற்றும் நடைமுறைகளைச் சீரமைக்கவே டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது.










