
புதுடெல்லி: செப். 24-
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் நிலவுவதாக தனியார் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர், தங்களின் கவனத்துக்கு வராமலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறி, கடந்த 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பைப் பதிவு செய்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு விளக்கம் அளித்து தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், எந்த நிறுவனத்திலும் ஆலோசனையின்போது மாறுபட்ட கருத்துகள் இருப்பது இயல்பானது என்றும், இறுதி முடிவுக்கு முன் அவை முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும், ஒருமித்த கருத்து அல்லது பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையிலேயே இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
மூன்று ஆணையர்கள் மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரிக்கும் தேர்தல் முறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க முழு உரிமை உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் அனைத்தும் முழு ஆணையத்தின் ஒருமனதான முடிவுகளே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கூறுகையில், மூன்று தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே 14 முறை கடிதப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது; இது அதிகாரப்பூர்வ ஆலோசனையின் அடையாளம் என்றும், ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அறிகுறி என்றும் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் மீதான விமர்சனம், காங்கிரஸின் அவதூறு பிரசாரத்தின் ஒரு பகுதி என்றும் அவர் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம், பாஜக, ஆர்.எஸ்.எஸ். மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கி, மேற்குவங்கத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். எஸ்ஐஆர் நடைமுறைகள் சட்டவிரோதமானவை என்றும், கடந்த ஆண்டுகளின் தேர்தல்களை ரத்து செய்து புதிய தேர்தல்கள் நடத்த வேண்டும் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.










