Home செய்திகள் தேசிய செய்திகள் மக்களுக்குச் சேவையாற்றுவதே முதன்மைப் பணி: மோடி

மக்களுக்குச் சேவையாற்றுவதே முதன்மைப் பணி: மோடி

புதுடெல்லி: செப். 24-
மக்களுக்குச் சேவையாற்றுவதே நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பொது வாழ்வில் பிரதமர் மோடி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் ‘சேவா சங்கல்ப் அபியான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் 17-ம் தேதி குஜராத்தின் வத்நகரில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி வரை மோட்டார் சைக்கிள் யாத்திரை தொடங்கியது.
இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ள 10 குழுக்களைச் சேர்ந்த சேவா யாத்திரீகர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
வத்நகரில் இருந்து வாரணாசி வரை 10 குழுக்களாக சேவா யாத்திரீகர்கள் இருசக்கர வாகனப் பேரணியை மேற்கொண்டு வருகின்றனர். அடிமட்ட அளவில் பொதுமக்களுடன் தொடர்பை ஏற்படுத்துதல், இளைஞர்களின் ஈடுபாட்டை அதிகரித்தல், சமூக நலனை மேம்படுத்துதல், கலாசார ரீதியான உறவை வலுப்படுத்துதல் ஆகியவை இந்த யாத்திரையின் நோக்கங்களாகும்.
எவ்வளவு உயர்ந்த அதிகாரத்தையோ, பதவியையோ ஒருவர் அடைந்தாலும், அவரது பாதை எப்போதும் சேவையை நோக்கியதாகவே இருக்க வேண்டும். அதை அவரது நடவடிக்கைகள் வெளிப்படுத்த வேண்டும். சேவை குறித்து வெறுமனே உபதேசம் செய்வதைவிட, சேவையாற்றுவதன் மூலமே நமது நோக்கத்தை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இந்தப் பயணத்தின்போது மக்களுக்குச் சேவையாற்றுவதன் மூலம் நீங்கள் ஒரு நற்காரியத்தைச் செய்து வருகிறீர்கள். மக்களுக்குச் சேவையாற்றுவதே அனைவரின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். சேவை குறித்த செய்தியை வெறும் வார்த்தைகளால் தெரிவிக்காமல், செயலின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். நாட்டை உருவாக்கும் இலக்குடன் நாம் களமிறங்கியுள்ளோம். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் பயணிக்கிறோம். இந்த இலக்கை நிறைவேற்றுவதில் இளைஞர்களின் மிக முக்கியப் பங்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினர் வளர்ந்த இந்தியாவை உருவாக்குபவர்களாக மட்டுமின்றி, அதன் பயன்களை மிகப்பெரிய அளவில் பெறுபவர்களாகவும் இருப்பார்கள்.