
பெங்களூர்: செப். 24-
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கால்நடை மருத்துவ அதிகாரிகள் பணி நியமன முறைகேடு வழக்கில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முன்ஜாமீன் கோரி முன்னாள் தேர்வாணைய உறுப்பினர் சாந்தா ஹோசமனி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இந்த மனு நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக, சாந்தா ஹோசமனி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை 52-வது நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் தற்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக சாந்தா ஹோசமனிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 384 கர்நாடக நிர்வாகப் பணி தேர்வு முறைகேடு வழக்கிலும் சாந்தா முக்கிய பங்கு வகித்துள்ளதாக குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாந்தா ஹோசமனி மூலம் கல்புரகி, பீதர் மற்றும் யாதகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 தேர்வர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்வர்களிடமும் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது.கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கால்நடை மருத்துவ அதிகாரிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றக் கோரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னால் மற்றும் மனுதாரர் மஞ்சுநாத் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தார்வாட் உயர் நீதிமன்ற அமர்வு, கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றுவதற்குப் பதிலாக, மூத்த காவல் துறை தலைமை இயக்குநர் அலோக் குமார் தலைமையில் உயர் மட்ட சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட்டது. அலோக் குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழுவில் திவ்யா கோபிநாத், அனூப் ஷெட்டி, குஷால் சோக்சி மற்றும் க்ஷமா மிஸ்ரா ஆகிய 5 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது விசாரசித்து வரும் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை, ஒரு வாரத்திற்குள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் புதிய சிறப்பு விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு விசாரணைக்குழு 100 நாட்களுக்குள் முழுமையான விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 30 நாட்களுக்கு ஒருமுறை விசாரணை முன்னேற்ற அறிக்கையை மூடிய உரையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.










