Home செய்திகள் உலக செய்திகள் சீனா, அமெரிக்கா கூட்டாளிகளாக இருக்க வேண்டும்: ஜி.ஜின்பிங்

சீனா, அமெரிக்கா கூட்டாளிகளாக இருக்க வேண்டும்: ஜி.ஜின்பிங்

வாஷிங்டன்: செப். 24-
சீனாவும், அமெரிக்காவும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி.ஜின்பிங் தெரிவித்துள்ளார். 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜி.ஜின்பிங், மேரிலாந்து விமான நிலையத்தை சென்றடைந்தார். அவரையும், அவரது மனைவி பெங் லியுவானையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேரில் வரவேற்றனர்.
இந்நிலையில், சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான சரியான வழியை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஜி. ஜின்பிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சீனாவும், அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல், கூட்டாளிகளாக இருக்க வேண்டும். இனிவரும் புதிய காலகட்டத்தில், இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான சரியான வழியை நாம் கண்டறிய முடியும். சீனாவும், அமெரிக்காவும் சிறந்த நாடுகள்; இருநாட்டு மக்களும் சிறந்த மக்கள்.
கடந்த மே மாதம் டிரம்ப் சீனாவுக்கு வந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையே ‘மூலோபாய ஸ்திரத்தன்மை’ கொண்ட உறவை உருவாக்க ஒப்புக்கொண்டோம். இது, இருதரப்பு உறவுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
சீனாவும், அமெரிக்காவும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும். அமெரிக்க, சீன மக்களிடையே நீண்டகாலமாக நட்புறவு நிலவி வருகிறது. இரு நாடுகளின் நலன்களும் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன.
சீன தேசத்தின் மகத்தான மறுமலர்ச்சியும், ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுதல்’ என்ற நோக்கமும் ஒன்றிணைந்து செயல்படக்கூடியவை. இவை ஒன்றுக்கொன்று துணையாக அமைந்து உலகிற்கு நன்மை அளிக்கக்கூடியவை” என்று ஜி.ஜின்பிங் தெரிவித்துள்ளார்.