Home செய்திகள் தேசிய செய்திகள் வாக்காளர் பட்டியல் – வீடு வீடாக ஆவணங்களைச் சேகரிக்க உத்தரவு

வாக்காளர் பட்டியல் – வீடு வீடாக ஆவணங்களைச் சேகரிக்க உத்தரவு

புதுடெல்லி, செப். 27- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது (எஸ்ஐஆர்), பெயர் விடுபட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆவணங்களைச் சேகரிக்க தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்ஐஆர் பணி தொடர்பாக முன்னணி ஆங்கில நாளிதழ் அண்மையில் புலனாய்வு செய்தியை வெளியிட்டது. அதில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது என்று சுட்டிக் காட்டப்பட்டது.

படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம், இசிஐநெட் மென்பொருளைக் கையாள்வதில் மாநில தேர்தல் அலுவலர்களின் அதிகாரம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் செய்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன. இதைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.3 ஆணையர்கள் கூட்டம்: இந்தச் சூழலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அதன் பிறகு தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர்நிலைக் கூட்டம் சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. எஸ்ஐஆர் பணியின் போது வாக்காளர்களின் ஆவணங்களில் முரண்பாடு இருந்தால் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

அந்த வாக்காளர்களின் வீடுகளுக்குத் தேர்தல் அலுவலர்கள் (பிஎல்ஓ) நேரில் சென்று உரிய ஆவணங்களைப் பெற்று இசிஐநெட் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட வாக்காளர்களைத், தேர்தல் அலுவலகங்களுக்கு (இஆர்ஓ/ஏஇஆர்ஓ) வருமாறு வற்புறுத்தக் கூடாது. மிக முக்கியக் காரணங்களுக்காக மட்டுமே வாக்காளர்களைத் தேர்தல் அலுவலகத்துக்கு வரவழைக்கலாம். ஆன்லைனில் மட்டுமே வாக்காளர்களிடம் விவரங்களைக் கேட்டறிய வேண்டும்.

சம்பந்தப்பட்ட வாக்காளருக்குப் பதிலாக அவரது குடும்ப உறுப்பினரும் ஆன்லைன் விசாரணையில் பங்கேற்கலாம். விடுபட்ட வாக்காளர் தொடர்பாக தேர்தல்பதிவு அலுவலர் (இஆர்ஓ) முடிவு எடுப்பார். இரவு தங்குமிடங்களில் வசிப்போர், தொழிலாளர்கள், ஏழைகள், வீடற்றோருக்காகச் சிறப்பு உதவி மையங்கள், சிறப்பு முகாம்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.