Home செய்திகள் தேசிய செய்திகள் ஸ்மித் மச்சார் குடும்பப் பெயரின் வரலாறு

ஸ்மித் மச்சார் குடும்பப் பெயரின் வரலாறு

குஜராத், அக். 4-
‘ஃபிளை துபாய்’ விமானப் பயணிகளைக் காப்பாற்றும் வகையில் துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் அவரைப் பாராட்டி பதிவுகள் வெளியாகி வரும் நிலையில், அவரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான தேடல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, ஸ்மித் மச்சாரின் ‘மச்சார்’ என்ற குடும்பப் பெயர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. பொதுவாக இந்தி அல்லது உருது மொழிகளில் ‘மச்சார்’ என்றால் ‘கொசு’ என்று பொருள். ஆனால், குடும்பப் பெயராகப் பயன்படுத்தப்படும் ‘மச்சார்’ என்பதற்கு வேறுபட்ட வரலாற்றுப் பின்னணியும் ஆழமான அர்த்தமும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குஜராத்தின் நாகர் பிராமணர்கள் மற்றும் லோஹானா வணிகச் சமூகத்தினரிடையே ‘மச்சார்’ என்பது பாரம்பரிய குடும்பப் பெயராக விளங்குகிறது. பேராசிரியர் வினோதினி நீலகண்ட் 1942-ம் ஆண்டு எழுதிய ‘குஜராத்தி அடகோனோ இதிஹாஸ்’ (குஜராத்தி குடும்பப்பெயர்களின் வரலாறு) என்ற நூலில், குஜராத்தி குடும்பப் பெயர்களின் தோற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். இடப்பெயர்கள், தொழில்கள், தனிப்பட்ட குணங்கள், நகைச்சுவையாக வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் குடும்பப் பெயர்கள் உருவானதாக அவர் பதிவு செய்துள்ளார்.எனினும், ‘மச்சார்’ குடும்பப் பெயர் எவ்வாறு உருவானது, அதற்கான காரணம் என்ன என்பவை குறித்து அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை. தலைமுறை தலைமுறையாக ஒரு சொல் மாற்றமடைந்திருக்கலாம், குடும்பம் வசித்த இடத்தின் பெயர் குடும்பப் பெயராக மாறியிருக்கலாம் அல்லது ஒரு புனைப்பெயர் அப்படியே நிலைத்திருக்கலாம் எனப் பல சாத்தியக்கூறுகளை அவர் முன்வைத்துள்ளார். ‘மச்சார்’ போலவே, யானையைக் குறிக்கும் ‘ஹத்தி’, குதிரையைக் குறிக்கும் ‘கோடா’, பூச்சியுடன் தொடர்புடைய ‘மங்கட்’, கிளியைக் குறிக்கும் ‘போபட்’ போன்ற குடும்பப் பெயர்களும் குஜராத்தி சமூகங்களில் உள்ளன. எனவே, ஒரு விலங்கு அல்லது பூச்சியின் நேரடி அர்த்தத்தை மட்டும் வைத்து குஜராத்தி குடும்பப் பெயர்களின் தோற்றத்தைத் தீர்மானிக்க முடியாது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.