Home செய்திகள் உலக செய்திகள் கேப்டன் ஸ்மிட் மச்சார் மனிதகுல நாயகன்: ஹெர்சாக்

கேப்டன் ஸ்மிட் மச்சார் மனிதகுல நாயகன்: ஹெர்சாக்

ஜெருசலேம், அக். 11-
“கேப்டன் ஸ்மிட் மச்சார், நீங்கள் இஸ்ரேல், இந்தியா மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன்” என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் பாராட்டு தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து டெல்அவிவ் நகருக்குச் சென்ற பிளைதுபாய் விமானத்தை கைப்பற்றி, விபத்தை ஏற்படுத்த முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. அந்தச் சம்பவத்தின்போது, இந்திய விமானி ஸ்மிட் மச்சாரை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹம்மாம் அல ஹம்மாமி கடுமையாக தாக்கினார். எனினும், ரத்த வெள்ளத்திலும் துணிச்சலுடன் செயல்பட்ட ஸ்மிட் மச்சார், அந்தச் சதி முயற்சியை முறியடித்தார். அவரது வீரதீர செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பல உயிர்களைக் காப்பாற்றிய விமானி ஸ்மிட் மச்சாருக்கு, இஸ்ரேலின் உயரிய விருதான குடிமக்கள் வீரதீர செயலுக்கான ஜனாதிபதி விருது வழங்கப்படும் என்று அதிபர் ஹெர்சாக் ஏற்கெனவே அறிவித்திருந்தார். மேலும், ஸ்மிட் மச்சார் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “கேப்டன் ஸ்மிட் மச்சார், நீங்கள் இஸ்ரேல், இந்தியா மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன். வார இறுதியில் நீங்கள் பெற்றுக்கொண்ட எனது கடிதத்தில், நீங்கள் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். “அந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டதுபோலவே, நீங்கள் உடல்நலம் தேறியதும் உங்களை இஸ்ரேலுக்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இஸ்ரேல் மக்களின் சார்பாக, மிக உயரிய விருதான குடிமக்கள் வீரதீர செயலுக்கான ஜனாதிபதி விருதை உங்களுக்கு வழங்குவதில் நான் பெருமை கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.