Home செய்திகள் உலக செய்திகள் தம்மாம் விமான நிலைய தாக்குதலில் ஒருவர் பலி

தம்மாம் விமான நிலைய தாக்குதலில் ஒருவர் பலி

ரியாத்: அக். 22-
சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலருக்கு லேசான காயங்களும், சிலருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான தம்மாமில் கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை குறிவைத்து நேற்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சவுதி சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தம்மாம் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு லேசான காயங்களும், சிலருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன. விமான நிலைய வளாகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதல் ஏவுகணை மூலம் நடத்தப்பட்டதா அல்லது ட்ரோன் மூலம் நடத்தப்பட்டதா என்பது தொடர்பான விரிவான தகவல்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. எனினும், ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சமீப நாட்களாக சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இலக்குகளை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், வளைகுடா நாடுகளில் மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.