
கொச்சி, அக். 27-
கொச்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தையான நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள சேரானல்லூரில், நேற்றுமுன்தினம் அதிகாலை ஸ்கூட்டரில் சென்றவர் மீது மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற ஜெயபாலகிருஷ்ணன் (55) உயிரிழந்தார். காரை ஓட்டி வந்தது எர்ணாகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியின் 17 வயது மகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, விபத்து தொடர்பாக சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சிறுவனுக்கு எர்ணாகுளம் சிறார் நீதிக் குழுமம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதற்கிடையே, உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் நடத்திய போராட்டம் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, 17 வயது சிறுவன் மீண்டும் காவலில் எடுக்கப்பட்டார். விபத்தில் சிக்கிய மெர்சிடிஸ் பென்ஸ் கார், சிறுவனின் தந்தையான நீதிபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கார் உரிமையாளர் என்ற அடிப்படையில் நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணனின் உறவினரான ஜெயலட்சுமி கூறியதாவது: “நாங்கள் காவல் நிலையத்துக்குச் சென்றபோது, உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்று தெரிவித்தனர். சட்டப்படி, 17 வயது சிறுவன் வாகனம் ஓட்டக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா என்று அவரது தந்தையான நீதிபதியிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘என்னைக் கேள்வி கேட்க உங்களுக்கு தகுதி இல்லை’ என்று ஆணவமாகப் பதிலளித்தார்” என்றார்.













