
திருவனந்தபுரம், அக். 27-
கொச்சியைச் சேர்ந்த சிஎம்ஆர்எல் தாது மணல் நிறுவனம், கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்தி வந்த எக்சாலாஜிக் மென்பொருள் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக ரூ.3.28 கோடி வழங்கியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும், கேரள லஞ்ச ஒழிப்புத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கேரள உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன், மருமகன் முகம்மது ரியாஸ் ஆகிய 3 பேரும் கேரள உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் நடராஜன் மற்றும் ஜான்சன் ஜான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பினராயி விஜயன் உள்பட 3 பேர் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். சிஎம்ஆர்எல் நிறுவனத்திடமிருந்து சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக பினராயி விஜயன் மற்றும் வீணா விஜயன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், முகம்மது ரியாஸ் மீது ஹவாலா பணப் பரிவர்த்தனை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.













