
புதுடெல்லி, அக். 27–-
தேர்தல் ஆணையருக்கு தடை விதிக்கக் கோரும் எந்த மனுவும் விசாரணைக்கு ஏற்றதல்ல என்று தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் தனது அதிகாரத்தைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதாகக் கூறி ராகேஷ் குமார் சிங் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் இந்தப் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், தன் மீதான குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் மூன்று உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடனேயே எடுக்கப்படுகின்றன என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரமான விவகாரங்களில் தேர்தல் ஆணையர்கள் மின்னணு முறையில் ஒப்புதல் அளிப்பதாகவும், பின்னர் அந்த ஒப்புதல் தொடர்பான விவரங்கள் கோப்புகளில் பதிவு செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. எனவே, முடிவுகள் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தவறானது என அது குறிப்பிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ல் எந்தத் திருத்தமும் செய்யப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் கூடுதல் உறுதிமொழிப் படிவம், படிவம் 6-ல் இருந்து தனியான ஆவணம் என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. அந்தக் கூடுதல் படிவம் இணையதளத்தில் இடம்பெற்றிருந்த விதம், படிவம் 6-ல் மாற்றம் செய்யப்பட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது. மேலும், 2025 ஜூன் 24, 2025 அக்டோபர் 27, 2026 மே 14 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான மூன்று உத்தரவுகளும், தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளின் அடிப்படையிலேயே பிறப்பிக்கப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













